Thursday, November 12, 2009

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

அன்று ஆத்மாக்கள் தினம்

மாமாவின் கல்லறை போய் பார்த்தேன்

ஓங்கி வளர்ந்த பன்னீர் மரம்

பூக்களை இரைந்து போட்டிருந்தது

உறவுகள் வந்து அழுதிருக்கிறார்கள்

சிலுவையின் அடியில் மெழுகுகள்

உருகி வடிந்து ஓடியிருக்கிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

கைப்பேசியில் மாமாவின் எண்

இன்றும் அழிக்காமல் உள்ளது

அழுத்திப் பார்த்தேன் திரும்ப திரும்ப

தொடர்புக்கு வெளியே உள்ளார் என

உண்மையே பதிலாக வந்தது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

மாமாவின் வீட்டிற்கு போனேன்

மெல்லியதான குரலில்

கீரீச்சிட்டு அழுதது

துருபிடித்த கிரில் கேட்

பனியில் நனைந்த பூக்கள்

அழுதது போல தலை கவிழ்ந்து

நீர் சொட்டியது வாசலில்.

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

வார்த்தைகளால் நம்மை

ஆட்கொள்ளும் அவரது அறை

மவுனமொழி வீற்றுருக்கிறது

சுவரில் ஆணியடித்த சட்டத்தில்

மாமா மந்தகாசமாய் புண்ணகைக்கிறார்

மூக்கு கண்ணாடி தூசி படிந்து

மேசையில் தூங்குகிறது

ஹாங்கரில் உரித்துபோட்ட தோலாக

அவரது சட்டைதொங்குகிறது

கதவில் அறைந்த ஆணியில்

வண்டிச்சாவி ஆடுகிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

அரங்கில் காலி மதுக்குடுவைகள்

கண்ணாடி ஜடங்களாக

வரிசையில் நிற்கின்றன

பருகி வைத்த கோப்பையில்

உதடுகளின் ரேகைகள்

ஆவனமாக பதிந்துள்ளது.

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

Friday, November 6, 2009

டிபன் பாக்ஸ்சில் துண்டு காகிதம்....


நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்த‌ர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு


(தண்ணீர் எந்த நிலத்தோடு சேர்ந்திருக்கிறதோ அந்த நிலத்தின் சாரமுள்ளதாக மாறிவிடும்.அது போல இயற்க்கையாக நல்ல புத்தியுடையவர்களும் அற்பபுத்திகாரர்களுடன் சேர்ந்தால் கெட்டுபோவார்கள் )


டிபன் பாக்ஸ்சில் துண்டு காகிதம்....


அன்றைக்கு தாத்தாவின் மனதுக்கு மிக கஸ்ட்டமாக இருந்தது காரணம்,மாமாவை நினைத்து. நாலைந்து பொட்டை பிள்ளைங்களுக்கிடையே மாமா ஆண்வாரிசு தாத்தாவுக்கு.


ஸ்காட் கிருஸ்த்தவ கல்லூரியில் மாமாவை பியூசி படிக்க சேர்த்திருந்தனர்.கல்லூரி ஆசிரியர் ஒருவர் தாத்தாவை சந்தித்த வேளையில் உங்க பையன் கல்லூரிக்கு வந்து அதிக நாளாச்சே என்ற
பெரிய குண்டை தூக்கிப்போட்டார்.தாத்தா அதிர்ச்சி அடைந்தார்கள், தாத்தா மிகவும் சாதுவான ஆள்தான்,ஆனால் அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவு தான்.அன்பாக இருப்பார் அதே அளவு கண்டிப்பாகவும் இருப்பார் .வீட்டுக்கு வந்த தாத்தா மாமாவை லெப்ட் அண்டு ரைட் வாங்கி விட்டார்.அப்ப ஒரு உண்மையும் வெளிவந்தது மாமா அந்த வருடம் முழுவதும் கல்லூரி பீஸ் எதுவுமே கட்டவில்லை என்பதும்.மாமா ஜாலியாக கல்லூரியை கட்டடித்து ஊர் சுத்தியுள்ளார்கள் என்ற குட்டும் வெளிப்பட்டது.இதற்கெல்லாம் யார் கம்பனி என்று பார்த்தால் மாமாவின் நெருங்கிய நண்பர் ஜான்சன் ஆகும். மாமாவை தாத்தா கண்காணிக்க தொடங்கினார்கள். மாமாவுக்கு வீட்டிலும் கல்லூரியிலும் நெருக்கடி ஆரம்பித்தது.


மாமாவுக்கு மனஉளச்சல் அதிகமானது.படிப்பு எட்டிக்காயாக கசந்தது.நண்பர்கள் இருவருமாக திட்டம் தீட்டினர்.அதற்கான நாள் குறித்தனர்,நாம இருவருமா சேர்ந்து எங்காவது ஓடிவிடலாமென்று முடிவு செய்தனர்.தாத்தாவின் நண்பர் மாமா கல்லூரிக்கு செல்வதால் போய் வர வசதியாக புதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் அதையும் விலைக்கு விற்று அந்த பணத்தையும் எடுத்தார்கள்.

மாலையில் இன்னொரு நண்பர் மூலமா தனது டிபன்பாக்ஸ் மற்றும் புத்தகங்களையும் வீட்டுக்கு கொடுத்தனுப்பினார்கள். வெகு நேரமாகியும் மாமா வீடு திரும்பாத‌தால் யாவரும் கலங்கிப்போனார்கள்.கொடுத்தனுப்பிய மாமாவின் டிபன்பாக்ஸ்யை கழுவ திறந்து பார்த்தால் அதில் துண்டு சீட்டு காகிதத்தில் ஒரு லெட்டர் எழுதி இருந்தது."யாரும் என்னை தேட வேண்டாம் நான் ஊரை விட்டு போகிறேன்" என்று மட்டும் எழுதியிருந்தார்கள்.


வீட்டில் சகோதிரிகள் அனைவரும் அழுது புலம்பினார்கள்,தாத்தா தேடாத இடமில்லை.மிகுந்த வருத்தத்தில் வீடே சோகமானது.பாட்டி படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.ஆள் வைத்து ஊர் முழுக்க சல்லடையாக தேடுகிறார்கள்,எந்த தகவலும் கிடைக்கவில்லை மாமாவைப்பற்றி.

மாமா காணாம‌ல் போன‌ த‌க‌வ‌ல் எங்க‌ அப்பாவின் காதுக‌ளுக்கு எட்டிய‌து.ஆளுக்கு ஒரு ப‌க்க‌ம் தேடி ச‌லித்து சோர்ந்துவிட்ட‌ன‌ர்.அப்பாவுக்கு ஒரு பொறித‌ட்டிய‌து மாமா ம‌துரைக்கு போயிருக்க‌லாம் என‌ ச‌ந்தேக‌ம் உருவான‌து.


கார‌ண‌ம் அந்த‌வேளையில் தான் எங்க‌ள் அம்மாவுக்கு அரசாங்க‌ வேலை ம‌துரையில் கிடைத்திருந்த‌து. அத‌ற்கு மாமா தான் ம‌துரைக்கு போய் அம்மா த‌ங்க‌குவ‌த‌ற்கான‌ வீடு பார்த்து கொடுத்த‌து,ம‌ற்றும் ப‌ல‌ உத‌விக‌ளையும் செய்தார்க‌ள்.என‌வே எங்க‌ள் அப்பா ம‌துரைக்கு கிள‌ம்பி சென்று ஒவ்வொரு விடுதியாக‌ தேடிய‌தில், ஒரு விடுதியில் மாமாவையும் அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ரையும் க‌ண்டு பிடித்த‌ன‌ர். பின்பு ந‌ல்ல வார்த்தைக‌ள் கூறி மாமாவுக்கு ஒரு கெடு விதித்த‌ன‌ர். அதாவ‌து ப‌த்து நாட்க‌ள் ம‌துரையில் அம்மாவின் அரவணைப்பில் த‌ங்கி வேலை தேடிகொள்ள வேண்டும்,இல்லையெனில் ஊருக்குப் போய்விட‌வேண்டும் என்று.மாமா தினம்தோறும் மதுரை மாந‌க‌ரில் வேலை தேடி க‌ம்பனி, க‌டையாக‌ அலைந்தார்க‌ள் ஆனால் மாமாவுக்கு வேலை கிடைக்க‌வில்லை.என‌வே கெடுமுடிந்து மாமா ஊர் வ‌ந்து சேர்ந்தார்க‌ள்.


க‌ல்லூரிக்கு போக‌ விருப்ப‌ம் இல்லையென‌ தாத்தாவிட‌ம் தெரிவித்தார்க‌ள்.பின்பு மாமாவை பாலிடெக்க‌னிக்கில் சேர்த்துவிட்ட‌ன‌ர்.என்ன‌ போதாத‌ கால‌மோ அங்கும் மாமாவுக்கு ப‌டிப்பை தொட‌ர‌முடிய‌வில்லை.பின்பு மாமா வேலை தேடி சென்னை சென்றார்க‌ள்.அங்கு அவ‌ர்க‌ளுக்கு கிடைத்த‌து ஹார்பரில் வ‌ட‌ம் இழுக்கும் வேலை. இர‌ண்டு மாத‌ங்க‌ளில் மாமா நொந்து நூடில்ஸ் ஆகி கைக‌ளெல்லாம் பிய்ந்து ஊர்வ‌ந்து சேர்ந்தார்க‌ள்.



ம‌ற்றுமொரு மனவெளியுடன் ச‌ந்திப்போம்...

கதை கேட்டு வளர்ந்தவங்க நாங்க....



எண்ணித் துணிக் க‌ருமம் துணிந்தபின்


எண்னுவம் என்பது இழுக்கு.



வனவாசம் போன கதை...



இன்னொரு த‌ட‌வை மாமா திடீர்ன்னு எங்க‌ வீட்டுக்கு வ‌ந்தாங்க, தலையை மொட்டை அடித்திருந்தாங்க. மாமா அழுக்கு ச‌ட்டையும் வேட்டியும் க‌ட்டியிருந்தாங்க ரொம்ப‌ ப‌த‌ட்ட‌மவும் இருந்தாங்க‌. அம்மா இது என்னடா வேசம்ன்னு திட்டிகிட்டே குளிக்க‌ சொல்லி, கிட்ட இருந்து சாப்பாடு போட்டாங்க‌. ஏன்டா இப்ப‌டியெல்லாம் செய்ற‌ன்னு எங்க‌ அம்மா ரொம்ப‌ வ‌ருத்த‌ப‌ட்டாங்க‌, அப்போது மாமா த‌லைகுனிஞ்சே இருந்தாங்க. அக்கா நான் இதுக்கு கார‌ண‌ம் இல்லை,என்னை சில‌ர் ஏமாத்திட்டாங்க‌ன்னு சொன்னாங்க‌.டேய் இதெல்லாம் விட்டுட்டு நீ ஊர்ல போய் அப்பாவுக்கு டைப் ஆபீசில் ஒத்தாசையாக‌ இருடான்னு அட்வைஸ் ப‌ண்ணினாங்க‌.அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போன‌ பின்பு நாங்க‌ மாமாவிட‌ம் க‌தை கேட்டோம்.



மாமா ப‌ய‌ங்க‌ர‌மா என்ன‌வெல்லாமோ சொன்னாங்க ஆனா ஒன்னுமே எங்க‌ளுக்கு புரிய‌ல்ல.அதுல‌ ஒன்னும‌ட்டும் இன்னும் ஞாப‌கத்தில் இருக்கு. மாமாவுக்க‌ கூட‌ நிறைய‌ பேர்க‌ள் சேர்ந்து எங்கோ பஸ் பிடிச்சு போனார்க‌ளாம் அவ‌ங்க‌ளுக்கும் மாமாவின் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ச‌ண்டை வ‌ந்திருச்சாம் பிற‌கு மாமாவும் ந‌ண்ப‌ர்க‌ளுமா எங்கெல்லாமோ ஓடினாங்க‌ளாம், மாமா காட்டுல‌ ஒரு ம‌ரத்துக்க‌ அடியில ராத்திரி ஒளிஞ்சிருந்த‌ப்ப‌ பெரிய‌ முள்ள‌ம்ப‌ன்றி மாமாவை துர‌த்திச்சாம். வாய் பிள‌ந்து க‌தை கேட்ட‌ நாங்க‌ மாமாவிட‌ம் கேட்ட‌ கேள்வி முள்ள‌ம்ப‌ன்றிக்கு முள் இருந்திச்சான்னு ? அது உங்க‌ளை முள் வ‌ச்சி குத்திச்சா மாமான்னு கேள்வி கணைக‌ளை தொடுத்தோம்.மாமா ச‌ளைக்காம‌ல் ப‌ல‌ புருடாக்க‌ளை அவிழ்த்து விட்டாங்க‌.பின்னாளில் தெரிந்த‌து மாமாவும் ந‌ண்ப‌ர்க‌ளும் ஏன் ஓடினார்க‌ள் என்று.ஒரு ப‌ஸ்சை பிடித்து ஊர்ல‌ நிறைய‌ ம‌க்க‌ளை டூர் கூட்டிட்டு போறோம்ன்னு அழைச்சுட்டு போனார்க‌ளாம் ஆனால் மாமாவின் ந‌ண்ப‌ர்கள் சில‌ர் ப‌ண‌த்தோட‌ எஸ்க்கேப் ஆகிட்டாங்க‌ளாம் பிறகு வேறு வ‌ழியில்லாமல் மாமாவும் வேறு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளும் எஸ் ஆகி த‌ப்பிச்சாங்களாம்.இது தான் மாமா காட்டில‌ முள்ள‌ம்பன்றிக்க‌ கூட‌ வாழ்ந்த‌ க‌தை.எங்களையெல்லாம் சுத்தி உக்கார வச்சுகிட்டு மாமா காட்டை பற்றி சொன்ன கதையும்,விதமும் அந்த சின்ன வயசுல காடு என்ற பிரமிப்பை மனசுல பதியம் போட்டிருந்தது.



ஊருக்குபோன மாமா தாத்தாவிடம் பேசி ஒரு டைப்ரைட்டரையும் மேசையும் கேட்டு வாங்கி நல்ல பிள்ளையாக ஆக்ட் கொடுக்க, குழித்துறை கோர்ட்டுக்க பக்கம் கடையெடுத்து டைப் ஆபீஸ் போட்டு கொடுத்தாங்களாம் தாத்தா.அங்கேயும் மாமா ஒழுங்கா போகல.


அதில தாத்தாவுக்குதான் பணக்கஸ்ட்டமும் மன வருத்தமும் ஏற்பட்டிருச்சு.இந்த பிரச்சனைக்க பிறகு மாமா ரொம்ப நாள் நெல்லையில எங்க வீட்டுல இருந்தாங்க.அப்போது மாமாவின் இன்னொரு திறமைய பார்க்க வாய்ப்பு ஏற்பட்டிச்சு.எங்கவீட்டில அப்போதுதான் ஒரு தையல்மிசின் எங்க அம்மா வாங்கியிருந்தாங்க அதுக்கு மூடி செய்ய மாமாவிடம் அம்மா சென்னாங்க.மாமா பிளைவுட், சட்டம்,ஆணி,மரம் எல்லாம் வாங்கிட்டு வந்து,ஒருவாரமா நல்ல தத்துரூபமா அழகான‌ ஒரு மூடியை செய்தாங்க. அந்த பெட்டியை செய்ய எடுத்துகிட்ட சிரமமும் சுறுசுறுப்பும் இன்றும் என்னுள்ளே பசுமையாக இருக்கு.இன்னைக்கு நான் புதியதாக ஏதாவது செய்யவோ அல்லது, படைப்பாற்றல் சம்மந்தமாக ஒரு முற்சியில் ஈடுபடும்போது அந்த காலத்தில் மாமாவிடம் நான் கண்ட அந்த வேகமும், ஈடுபாடும் நேர்த்தியும் என்னுள்ளே ஒரு உத்வேகமாக உருவெடுக்கும்.



ம‌ற்றுமொரு மனவெளியுடன் சந்திப்போம்.....