வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
1960 ல் மாமா...
பஸ் நாகர்கோவிலை நெருங்க நெருங்க எங்களுக்குள்ள இனம் புரியாத சந்தோசம் ஒரு பிரளயமாக எங்க சின்ன மனசுல உருவாகும்.எங்க சின்ன வயசில சகோதரங்க நாங்க எல்லாருமா சேர்ந்து கோடை விடுமுறைக்காக ஊருக்கு வரும்போது நடந்த பல விசயங்கள் எங்களுடைய மனசில ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கு,சில நிகழ்வுகளும்,நாஞசில் நாட்டின் மண் வாசனையும் இங்குள்ள பேச்சின் சுவாரஸ்யங்களும், உறவினர்களும் அவங்களுடைய குணாதிசயங்களும் என் மனதின் நினைவலை அடுக்குகளுக்குள் நிரம்ப கிடக்கின்றன.ஒரு பெரிய வீட்டின் அரங்குமுறிக்குள்ள புழங்காமல் இருக்ககூடிய செம்பு பாத்திரத்தில் பழுப்பேரியது மாதிரி இன்னும் மனசுக்குள்ள அந்த நினைவுகள் நிரம்பி கிடக்கின்றன. மனசை கொஞ்சம் பின்னோக்கி ரீவைண்டு அடித்துசென்றால் இன்றும் அந்த நினைவுகள் எல்லாம் பளபளப்பா துலக்கி வைத்த செம்பு பாத்திரம் போல பால்ய நினைவுகளக புதைஞ்சே இருக்கு.
"ச்சே" நாம குழந்தையாகவே இருந்திருக்கமாட்டோமா என்ற ஏக்கம் வந்து இப்பவும் மனசு தவிக்கும்...
ஒழுகினசேரி பாலத்தில எங்க பஸ் வரும்போதே நாங்க ஜன்னல் வழியா பார்த்திட்டோம் மாமாவை. டேய் அன்னா... மாமா சைக்கிள்ல வருதுன்னு சத்தம் போட்டேம். நாங்க நாலுபேரும் சேர்ந்து போட்ட சத்தம் ரோட்டில சைக்கிள் ஓட்டிட்டு வந்த பாபு மாமாவுக்கும் கேட்டிருச்சு, மாமா சைக்கிளின் சென்டர் பாரின் மேல நின்னுகிட்டு வேகமா சைக்கிளை சமுட்டிக்கிட்டே எங்களை பார்த்து சிரிச்சாங்க.மீனாட்சிபுரம் பஸ்ஸ்டான்டு வரைக்கும் மாமா பஸ்ஸுக்கு கூடவே சைக்கிளை ஓட்டிடேவந்தாங்க.மாமா பாக்கிறதுக்கு மீடியமான உயரமா, சல்லியான உடம்பு,மீசை உதட்டுக்க மேல வரஞ்சு வச்ச மாதிரி வச்சிருப்பாங்க பெரிய பாக்கெட் உள்ள அரைக்கால் நிக்கரு போட்டிருப்பாங்க.எங்களை அழைச்சுட்டு போறதுக்கு ஒத்த காளை மாட்டு வண்டிய வாடகைக்கு பிடிச்சு எங்களை ஏத்தி விட்டாங்க அந்த மாட்டு வண்டிக்க அடியில தொங்கின வலை மாதிரியிருந்த தொங்கல் பையில மாட்டுக்கு திங்கிறதுக்கான வைக்கோலு கட்டி வைச்சிருந்தாங்க அதுக்க கூடதான் எங்க பெட்டி, சாமான்களை போட்டு விட்டாங்க.பாரம் தாங்காம வண்டி முன்பக்கம் உயரமா உயர்ந்துகிட்டுதான் நகர்ந்து வந்திச்சு. மாமா சைக்கிளை மாட்டு வண்டிக்க பின்னாலேயே சமிட்டிட்டே ஓட்டி வந்தாங்க.சைக்கிள் ஓட்ட தெரியாத எங்களுக்கு மாமா பேலன்ஸ் பண்ணி ஓட்டிட்டு வந்தது ஏதோ மாமா சர்க்கஸ் காரர் போல வித்தை காட்டிட்டு வந்தது மாதிரி, பெரிய இமேஜ்ஜாக மாமா அப்ப எங்களுக்கு இருந்தாங்க.
அந்த லீவில தான் மாமா எங்களுக்கு டெக்கான் முட்டாய்ய அறிமுக படுத்தி வச்சது,நெல்லையில அப்ப எல்லாம் எங்களுக்கு தெரிஞ்ச முட்டாய்கள் அச்சு வெல்லமும் சவ்முட்டாயும் அப்புறம் கல்கோனா முட்டாய்யும் தான்.நாகர்கோவில்ல மாமா வாங்கி தந்த டெக்கான் முட்டாய் வாயில போட்டு கடுபுடுன்னு கடிச்சு திங்கறதுக்கும் நல்லா இருக்கும், அப்படியே வாயில போட்டு மென்று தின்னா சுமார் அரை மணிநேரமெல்லாம் வாயில கிடக்கும் நாக்குகுள்ள அமிர்தமா கரைஞ்சு தொண்டைக்குள்ள உலக்கைஅருவி வழியிரதுமாதிரி பாலா வழிஞ்சி கரையும். இந்த டெக்கான் முட்டாய் எதுல மாமா செய்ததுன்னு கேட்டதுக்கு பால்ல செய்ததுன்னாங்க.
எங்க பாட்டி வீட்டுல ஐஞ்சாறு பொம்பளை பிள்ளைக்க இடையில மாமா பிறந்ததால அவங்க எல்லாருக்கும் செல்ல பிள்ளை மாதிரி இருந்தாங்க. மாமா அப்பல்லாம் வீட்டுல இருக்கிறதே அபூர்வம் அப்படியே இருந்தாங்கன்னா வீடே அல்லோலப்படும்.ஒரே தமாஸும் கூத்துமாக இருக்கும்.நளி அடிக்கிறதுல மாமா பயங்கர ஆளாக்கும்.
உறவுகள் ஒவ்வொருவரையும் பற்றி யேசித்தால் ஒரு நீள எப்பிசைடாக போயிட்டேயிருக்கும்.இருந்தாலும் நம்மை பாதித்தவர்களை,இறந்த பின்னும் நம்மோடுநினைவலைகளாக வாழ்பவர்களை எண்ணி பார்க்காமல் இருக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில வேறுவேறு வேசங்களும் முகமூடிகளும் தரித்திருந்தாலும், சிலரின் சாயல்களும் முந்தையவர்களின் ஏதோ ஒரு எச்சங்கள் நம்முள்ளே தங்கிபோயுள்ளது என்பதுதான் உண்மை.சில இடங்களில் நம்மையரியாமலே முன்னோர்களை நாம் பிரதிபலிக்கின்றோம்.
பாபு மாமா.....இவங்க எனக்குள்ள நிறைய சலனத்தை ஏற்படுத்தினவங்க.நான் வளர்ந்த பிறகு நிறைய பேர் என்னிடம் நீ பாபுக்க தம்பியான்னு கேட்டதுண்டு.சிலர் என்னிடம் உன்னை எங்கேயோ பார்த்தது போல இருக்கன்னு இழுபாங்க பிறகு நானே எங்க பாபு மாமாவை உங்களுக்கு தெரியுமான்னு கேட்பதுண்டு உடனே அவர்கள் சுதாகரித்துக்கொண்டு, தலையில அடிச்சுகிட்டு ஏய்ய்!! அதான பார்த்தேன்னு சினேகம் ஆவாங்க.
வளர்ந்து அறிவு வந்த போதுபாபு மாமாங்கிற ஆழுமை நினைவில் கொள்ளும்போதுசட்டென நினைவுக்கு வருவது சுருண்ட தலை முடி,பெரிய தொப்பை வயறு,தழும்புகிற மது கோப்பை, அது போல நகைச்சுவையும். ஆனா இடப்பட்டவயசுல மாமான்னா நாபகத்திற்கு வருவது பைக்தான்.ஆரம்பத்தில மாமா லாம்பி ஸ்கூட்டர் வச்சிருந்தாங்க பிறகு அதிக நாள் ஜாவா பைக்தான் ஓட்டிட்டுருந்தாங்க.
மாமா இன்னைக்கு வீட்டுக்கு வருவாங்கன்னு தகவல் கிடைச்ச பிறகு நாங்க எதிர் பார்த்து காத்திருப்பது அந்த தகர டப்பால அடிச்சது மாதிரி கேட்கும் "டம டம" சத்தத்தை தான். மாமா வருவதுக்கு முன்னமே பைக் சத்தம் கேட்க்கும் அதுமாதிரி மாமா வீட்டிலிருந்து புறப்பட்டபின்பும் கொஞ்ச நேரம் அந்த பைக் சத்தம் கேட்டுட்டே இருக்கும், சில நேரங்களில் அந்த பைக் சத்தம் காதுகளில் ரீங்காரமாக கேட்க்கும். ஆனை வரும் பின்னே மணியேசை வரும் முன்னே என்று படித்ததை சின்ன வயசில மாமா பைக் வந்து போவதையும் சேர்த்தே முடிந்து போட்டு மனசில வைத்திருந்தேன்.
இப்பல்லாம் செல்ஃப் ஸ்ட்டார்ட் பைக்குகள் நிறைய வந்திரிச்சு ஆனா மாமா முப்பது வருசத்துக்க முன்பே பட்டணை அமுக்கினா ஸ்ட்டார்ட் ஆகிற ஸ்கூட்டர் வச்சிருந்தாங்க.நாங்கல்லாம் அதிசயமா பார்த்து வாய பிளப்போம்.வண்டியில மாமா ரொம்ப வேகமாதான் போகுமாம். ரெண்டு மூணுதடவை மாமா வண்டியிலிருந்து கீழ விழுந்து கையை உடைச்சி கைகெட்டு போட்டுட்டு வீட்டுல இருந்தது ஞாபகம் இருக்கு.
மாமாவுக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்னமே நெல்லையில எங்கவீட்டுக்கு அடிக்கடி மாமா வந்து பல நாட்கள் தங்குவாங்க. அப்ப எங்க அம்மா மாமாவை ஏசுவாங்க நிறைய குறுக்க மறுக்க கேள்விகள் கேட்டு திட்டுவாங்க ஆனா மாமா பதிலே பேசாமல் சிரிச்சு மழுப்பலா ஏதேதோ சொல்லி அக்கா அக்கான்னு தாஜா பண்ணி சமாளிப்பாங்க.அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போன பின்பு மாமா வீட்டுல ஒதுக்கமா போயி சிகரட் குடிப்பாங்க நல்லா இழுத்து புகைய குடிச்சு வளையம் வளையமா வெள்ளை புகையை விடுவாங்க. எங்களையெல்லாம் கூட்டி உக்கார வச்சு அவங்க பைக் ஓட்டுறதுல நடந்த நிறைய சாகசங்களை ரொம்ப விஸ்த்தாரமா கதை சொல்லுவாங்க.பைக் ஓட்டும்போதே மாமா கையை விட்டுருமா டைவ் கூட அடிக்குமாம்.ஒரு நாள் மாமா சாலையில் பைக் ஓட்டும் போது ஒரு வண்டிக்காரன் திடீர்ன்னு குறுக்கே வந்திட்டானாம் மாமா அப்படியே ஒரு பேப்பர் கட் அடித்து தப்பிச்சாங்களாம் இதை சொல்லும் போது நாங்களெல்லாம் கண்ணிமைக்காம மாமா முகத்தையே பார்த்திட்டுருப்போம்.மாமா அப்ப எங்களுக்கு ஒரு ஹீரோ மாதிரி தெரிஞ்சாங்க.
ஜவஹர்ஜி...
மற்றும்மொரு மனவெளியுடன் வருகிறேன்.....